CINEMA
மதம் மாறியதற்கு இதுதான் காரணமா? …கோயிலில் அவமானம்… மசூதியில் சமத்துவம்…அவர் அழுதா எனக்கும் அழுகை வந்திரும்…15 ஆண்டுகளுக்குப் பின் மௌனம் கலைத்த ‘சுப்ரமணியபுரம்’ ஜெய்…!
‘சுப்ரமணியபுரம்’, ‘எங்கேயும் எப்போதும்’ போன்ற மெகா ஹிட் திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் ஜெய். திறமையான நடிகராக இருந்தபோதிலும், சமீபகாலமாக இவரது படங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியதால், அவருக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்ற பேச்சு திரைத்துறையில் நிலவி வருகிறது. இசையமைப்பாளர் தேவாவின் உறவினரான ஜெய், விஜய்யின் ‘பகவதி’ திரைப்படத்தில் அவரது தம்பியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்கான ஆழமான பின்னணி குறித்து ஜெய் தற்போது அளித்துள்ள பேட்டி இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.
மத மாற்றம் குறித்துப் பேசிய ஜெய், “நான் ஆரம்பத்தில் அனைத்து கடவுள்களும் ஒன்றுதான் என்று நினைத்திருந்தேன். ஆனால், கோயிலில் எனக்குச் சில அவமானங்கள் நடந்தன. அதேசமயம், நான் மசூதியில் தொழுகை செய்யும்போது யாரும் என்னை வித்யாசமாகப் பார்க்கவில்லை; அங்கே எல்லோரையும் ஒரே மாதிரிதான் நடத்தினார்கள். மசூதிக்குள் வந்துவிட்டால் மனிதர்களை விட கடவுளைத்தான் பெரிதாக நினைக்கிறார்கள்; யாரும் நம்மைத் தள்ளிவிடுவதில்லை. இந்தச் சமத்துவமும், நிம்மதியும்தான் என்னை இந்த மதத்தைப் பின்பற்ற வைத்தது” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேர்காணலில் முதலமைச்சர் விஜய் மீதான தனது அளவுகடந்த பாசம் குறித்தும் ஜெய் வெளிப்படையாகப் பேசியுள்ளார். சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் தவெக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தது குறித்துப் பேசிய அவர், “விஜய் அண்ணா திரையில் அழுதால் கூட நான் நிஜத்தில் அழுதுவிடுவேன். எனக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்ததே அவர்தான். அவருக்கு ஆதரவு கொடுப்பதால் என் வாழ்க்கையே போகும் என்றாலும் அதை இழக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், விஜய்யின் மேனரிசங்களில் ரஜினி மற்றும் நவரச நாயகன் கார்த்திக்கின் சாயல் அதிகம் இருக்கும் என்றும் அவர் அந்தப் பேட்டியில் சுவாரசியமாகப் பகிர்ந்துள்ளார்.
