LATEST NEWS
“காலை உணவுக்குப் பதில் மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்குவதா…? எண்ணிக்கை கூடினால் என்ன…? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்….!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, சுமார் 40 பள்ளி மாணவர்கள் உணவின்றித் தவித்ததும், அவர்களுக்குப் பசிக்கு மாற்றாக பிஸ்கட் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டதும் தமக்கு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளதாகத் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் பசியின்றி கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்படும் மக்கள் நலத்திட்டங்களைக்கூடச் சரிவர நடத்தத் தெரியாத ஒரு திறமையற்ற அரசாகவே முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கை உயர்ந்ததால் தான் உணவுப் பற்றாக்குறை நேரிட்டது என்று அதிகாரிகள் கூறும் விசித்திரமான காரணத்தை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பிள்ளைகளின் எண்ணிக்கை கூடும்போது அதற்கு ஏற்ப உணவின் அளவை அதிகரிக்கத் திட்டமிடாதது முழுக்க முழுக்க அரசு நிர்வாகத்தின் தோல்வியே என்றும் அவர் சுட்டிக்காடியுள்ளார்.
எனவே, தமிழக முதல்வர் விஜய் அவர்கள், விளாத்திகுளம் கல்வி நிறுவனத்தில் நடந்த இந்த அவலமான சம்பவத்திற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் அலட்சியமாகப் பணிபுரிந்த ஊழியர்கள் மீது உடனடியாகத் துறை ரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், வரும் காலங்களில் தமிழ்நாட்டின் எந்தவொரு அரசுப் பள்ளியிலும் இத்தகைய மோசமான சூழல் மீண்டும் உருவாகக் கூடாது என்றும் அவர் த.வெ.க அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
