LATEST NEWS
கடந்த 15 வருஷமா எதையுமே பண்ணல…தமிழ்நாடு முழுவதும் திடீர் மின்வெட்டுக்கு இதுதான் காரணமா?…அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த ‘நறுக்’ பதில்… 40 ஆயிரம் டிரான்ஸ்பார்மர் ஊழலில் சிபிஐ வழக்கு…சிக்கிய முன்னாள் அமைச்சர்…
“அண்ணன் பவருக்கு வந்தால் மாற்றம் வரும் என்று சொன்னார்கள்; ஆனால், அவர் பவருக்கு வந்ததால் தமிழ்நாட்டிற்கே ‘பவர்’ (மின்சாரம்) போய்விட்டது” என்று தமிழகச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யை நக்கலடிக்கும் விதமாக விமர்சித்துப் பேசியுள்ளார். தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரே மாதத்தில், மின்வெட்டுப் பிரச்சினையில் சென்னை பெரம்பூர் தொகுதியை நம்பர் 1 தொகுதியாக இந்த அரசு மாற்றியுள்ளதாக ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். மேலும், தூய்மைப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதா? என்ற கேள்வியையும் அவர் பேரவையில் அதிரடியாக எழுப்பினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் இந்த மின்வெட்டுப் புகாருக்குப் பதிலளித்துப் பேசிய மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், மின்சாரத்துறையில் தற்போது ₹2.5 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும், கடந்த 15 ஆண்டுகளில் இத்துறையில் எந்தவொரு முறையான உள்கட்டமைப்புப் பணிகளும் செய்யப்படவில்லை என்றும் விளக்கமளித்தார். இதுகுறித்த விரிவான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனக் குறிப்பிட்ட அவர், கடந்த 10 நாட்களில் மின்வெட்டுப் பிரச்சினைகளைச் சீரமைக்க 125 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதாகக் கூறினார். மேலும், மின் விநியோகத் தடையை ஏற்படுத்த சில இடங்களில் ஃபியூஸ் கட்டுகளைத் திருடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொத்தாம்பொதுவாகக் குற்றச்சாட்டுகளை வைக்கக் கூடாது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எழுந்து இதற்கு விளக்கம் அளித்தார். கடந்த 5 ஆண்டுகளில் சீரான மின் விநியோகத்திற்காக 393 துணை மின் நிலையங்கள் மற்றும் 90 ஆயிரம் மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) மாற்றப்பட்டுச் சீரமைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு மின்துறை அதிகாரிகளை அழைத்து இதுவரை எந்தவொரு ஆய்வுக் கூட்டமும் நடத்தப்படவில்லை என்று ஊழியர்கள் கூறுவதைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த காலக் குறைகளைக் கூறுவதை விடுத்து சீரான மின் விநியோகத்திற்கு அரசு முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதற்கு இறுதிப் பதிலடி கொடுத்த அமைச்சர் நிர்மல் குமார், “கடந்த ஆட்சியில் 90 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் கணக்கில், சுமார் 40 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக ஏற்கனவே சிபிஐ (CBI) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறி அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
