LATEST NEWS
PF பணத்தை எடுக்க அவசரமா…? மூன்று நாட்களுக்குத் தடைபடும் முக்கிய ஆன்லைன் சேவைகள்… மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு…!!!
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) அதிகாரப்பூர்வ இணையதளம், திட்டமிடப்பட்ட மென்பொருள் பயன்பாட்டு மேம்பாடு மற்றும் தரவுத்தள ஒருங்கிணைப்புப் பணிகள் காரணமாக இன்று நள்ளிரவு (00:00 மணி முதல்) ஜூன் 28 ஆம் தேதி இரவு 23:59 மணி வரை தற்காலிகமாகச் செயல்படாது.
இந்த மூன்று நாட்களும் இபிஎஃப் உறுப்பினர்கள் தங்களின் பிஎஃப் தொகையைத் திரும்பப் பெறுதல், கணக்கு மாற்றம் செய்தல், ஓய்வூதியக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தல் மற்றும் கேஒய்சி விவரங்களைப் புதுப்பித்தல் போன்ற முக்கிய இணையவழிச் சேவைகளைப் பயன்படுத்த முடியாது. மேலும், ஏற்கனவே கோரிக்கைகளைச் சமர்ப்பித்துள்ள பயனர்களின் மனுக்களைப் பரிசீலிப்பதிலும் கூடுதல் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், அவசரத் தேவைகளை ஜூன் 26-க்கு முன்னரே முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும், இணையதளம் முடங்கியிருக்கும் இக்காலகட்டத்தில் பயனர்கள் தங்களின் கணக்கு இருப்பு மற்றும் பாஸ்புக் விபரங்களைச் சரிபார்க்க மாற்று வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சந்தாதாரர்கள் தங்களின் பதிவுசெய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுத்தோ அல்லது எஸ்எம்எஸ் (SMS) அனுப்புவதன் மூலமோ விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதுதவிர, உமாங் (UMANG) மொபைல் செயலி மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாகவும் பிஎஃப் கணக்கு விபரங்கள் மற்றும் கோரிக்கைகளின் நிலையை இணையதளத்திற்குச் செல்லாமலேயே எளிதாக அறிய முடியும். இந்த மென்பொருள் புதுப்பித்தல் பணி முற்றிலும் நிறைவடைந்த பிறகு, வாடிக்கையாளர்கள் தங்களின் பிஎஃப் கணக்குகளை மிக வேகமாகவும், எவ்விதத் தொய்வுமின்றியும் எளிமையான முறையில் கையாள முடியும் என இபிஎஃப்ஓ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
