LATEST NEWS
“வேறு யாராக இருந்தால் உள்ளே தள்ளியிருப்பார்கள்….” சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் காட்டிய சைகைக்கு நயினார் நாகேந்திரன் டென்ஷன்…! காரசார விமர்சனம்…!!
தமிழகச் சட்டமன்றத்தில் தவெக முதலமைச்சர் விஜய் திமுகவை விமர்சித்துப் பேசிய குட்டிக்கதையும், அவர் செய்து காட்டிய சைகையும் அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் தொகுதி நிலவரம் மற்றும் திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து அவர் சினிமா பாணியில் பேசிய வசனங்களுக்கு திமுக, விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. இச்சம்பவம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அவை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், இதே சைகையைச் சாதாரண நபர் யாராவது பொதுவெளியில் செய்திருந்தால் இந்நேரம் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் என்றும் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்றப் பேரவையில் மக்கள் பிரதிநிதிகள் சினிமா பாணி வசனங்களைத் தவிர்த்துத் தகுதியோடும் பண்போடும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அண்மையில் மாணவிகள் பங்கேற்ற யோகா நிகழ்வின் போது உயர்கல்வித்துறை அமைச்சர் அநாகரிகமாக நடந்துகொண்டதாகத் தற்பொழுது இணையத்தில் பரவி வரும் காணொளி குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். அது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், அத்தகைய செயல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், மக்கள் நலனில் அக்கறையின்றிச் செயல்படும் இத்தகைய போக்குகள் கண்டனத்திற்குரியவை என்றும் அவர் விளக்கியுள்ளார்.
