LATEST NEWS
இனி ஹாஸ்பிடல்ல ரீல்ஸ் எடுத்தா அவ்வளவுதான்..! இன்ஸ்டா கிரியேட்டர்களுக்கு செக்… தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிரடி எச்சரிக்கை..!!
தமிழகம் முழுவதும் நடைபெற்ற போலியோ தடுப்புச் சொட்டு மருந்து முகாமின் போது, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குள் ஒருசில அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களைச் சேர்ந்தவர்கள் எவ்வித அனுமதியுமின்றி நுழைந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்குவது போலவும், மருத்துவப் பதிவேடுகளை ஆய்வு செய்வது போலவும் ‘ரீல்ஸ்’ மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் விளம்பர நோக்கில் பதிவேற்றியுள்ளனர். நோயாளிகளின் அமைதிக்கும் தனியுரிமைக்கும் தொந்தரவு தரும் வகையில் அமைந்த இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களையும் விவாதங்களையும் கிளப்பியது.
இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் முறையான அனுமதியின்றி சிகிச்சை அளிக்கும் காட்சிகளையோ அல்லது மற்ற நிகழ்வுகளையோ வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுக்க முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே சமூக வலைதளங்களில் இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோக்களை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
விளம்பர நோக்கத்தில் நோயாளிகளின் தனியுரிமையைப் பாதிப்பதையும், மருத்துவப் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவை மீறி அனுமதியின்றி மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளைப் படம் பிடித்துப் பரப்பினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, அரசு ஊழியர்களின் கடமைகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயல்பட்டால், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 221-ன் கீழ் அரசுப் பணியைச் செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
