LATEST NEWS
பொதுமக்களுக்கு முக்கிய அலர்ட்..! ஆதார், பாஸ்போர்ட் மற்றும் வருமான வரி தாக்கல்.. ஜூலை-1 முதல் இதெல்லாம் மாறப்போகுது..!!
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் , பொதுமக்கள் தங்களின் ஆதார் அட்டையில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ள புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, 2026 ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரை ஆறு மாத காலத்திற்கு, வழக்கமாக வசூலிக்கப்படும் ₹75 கட்டணம் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது. பொதுமக்கள் இந்தச் சேவையை அதிகாரப்பூர்வ ஆதார் மொபைல் செயலி (Aadhaar mobile app) மூலமாக மட்டுமே முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதே நேரத்தில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பாஸ்போர்ட் கட்டணங்களை கணிசமாக உயர்த்தியுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, சாதாரண 36 பக்க பாஸ்போர்ட் கட்டணம் ₹1,500-லிருந்து ₹2,500 ஆகவும், தட்கல் பாஸ்போர்ட் கட்டணம் ₹3,500-லிருந்து ₹5,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், 2025-26 நிதியாண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2026-27) வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கான முக்கியக் காலக்கெடு நெருங்கி வருகிறது. சம்பளம் மற்றும் இதர எளிய வருமானம் கொண்ட தனிநபர்கள் பயன்படுத்தும் ITR-1 மற்றும் ITR-2 படிவங்களின் கீழ் வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31, 2026 ஆகும். இந்தத் தேதிக்குள் வருமான வரித் தாக்கலை சமர்ப்பிக்கத் தவறினால், ஆண்டு வருமானத்தைப் பொறுத்து ₹1,000 முதல் ₹5,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், தாமதமாகத் தாக்கல் செய்யும்போது புதிய வரி முறையைத் தேர்ந்தெடுப்பதிலும், நிதி இழப்புகளை அடுத்தடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்வதிலும் சிக்கல்கள் ஏற்படும் என்பதால், வரி செலுத்துவோர் உரிய நேரத்திற்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
