LATEST NEWS
“நான் உயிரோடுதான் இருக்கிறேன்!” இணையத்தை உலுக்கிய ‘Fake News’!…எம்பிஏ சாய்வாலா நிறுவனர் இறந்துவிட்டதாகப் பரவிய போலி செய்தி; இன்ஸ்டாகிராமில் கொந்தளித்த தொழிலதிபர்..!!
‘எம்பிஏ சாய்வாலா’ நிறுவனரான பிரபல இளம் தொழிலதிபர் பிரபுல் பில்லோர், தான் இறந்துவிட்டதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக “நான் உயிரோடுதான் இருக்கிறேன்” என்று அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பரவிய போலிப் பதிவுகள் மூலம் அவர் காலமானதாக வதந்திகள் காட்டுத்தீ போல பரவின. இதனைத் தொடர்ந்து, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ள அவர், இத்தகைய போலிச் செய்திகள் தன்னை மிகவும் காயப்படுத்துவதாகவும், வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துமாறும் நெட்டிசன்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, கூகுளில் “பிரபுல் பில்லோர் மரணம்” என்று தேடப்பட்ட ஸ்கிரீன்ஷாட் ஒன்றை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து பிரபுல் பில்லோர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், “இது மிகவும் முட்டாள்தனமானது மற்றும் புண்படுத்தக்கூடியது; தயவுசெய்து போலிச் செய்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள். நான் நலமாக, உயிரோடு இருக்கிறேன்” என்று குறிப்பிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். உண்மை நிலை தெரியாமல் பலரும் அவருக்கு இரங்கல் செய்திகளைப் பதிவிட்டு வந்த நிலையில், அவரது இந்த நேரடி விளக்கம் அவரது ரசிகர்களுக்கும் பின்பற்றுபவர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிரபுல் பில்லோர், தனது எம்பிஏ படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெறும் ₹8,000 முதலீட்டில் ஒரு சிறிய தேநீர் கடையைத் தொடங்கினார். தனது தனித்துவமான மார்க்கெட்டிங் உத்திகள் மற்றும் கடின உழைப்பால் ‘எம்பிஏ சாய்வாலா’ என்ற பிராண்டை நாடு முழுவதும் கொண்டு சேர்த்துப் புகழ்பெற்றார். தற்போது இணையத்தில் பரவிய இந்த வதந்தி, சமூக வலைத்தளங்களில் உண்மைத்தன்மையை ஆராயாமல் எந்த அளவிற்கு வேகமாகப் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன என்பதற்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.
