LATEST NEWS
ஈரானில் கண்ணீர் கடல்… கமேனிக்கு அஞ்சலி செலுத்தி குலுங்கி குலுங்கி அழுத சபாநாயகர், வெளியுறவு அமைச்சர்.. வைரலாகும் நெகிழ்ச்சி காட்சி …!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் கூட்டுத் தாக்குதலால் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நேற்று தலைநகர் தெஹ்ரானில் முறைப்படி தொடங்கின. கடந்த பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் அலி கமேனியுடன் சேர்த்து அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் உடல்கள் கடந்த 4 மாதங்களாகக் குளிரூட்டப்பட்ட ரகசிய அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. தற்போது போர்ப் பதற்றங்கள் தணிந்து அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள சூழலில், இந்த இறுதி மரியாதை நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தெஹ்ரானில் உள்ள இமாம் கமேனி கிராண்ட் மொசல்லா வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக இவர்களது சவப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உருக்கமான நிகழ்வில் ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அப்போது அலி கமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது, சபாநாயகர் முகமது பாகரும் அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் தங்களது துக்கத்தைத் தாங்க முடியாமல் குலுங்கி குலுங்கி அழுது கண்ணீர் விட்டனர். இவர்களைப் போலவே அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் அழுது புலம்பியதால் அந்த இடமே பெரும் சோகமயமாகக் காட்சி அளித்தது.
லட்சக்கணக்கான மக்கள் இந்த அஞ்சலி நிகழ்வில் தொடர்ந்து பங்கேற்க உள்ளதால், தெஹ்ரான் கவர்னர் அங்கு உச்சகட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளார். ஈரானின் இந்தத் துயர நிகழ்வில் சர்வதேச நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக இந்தியாவின் சார்பாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெக்பூபா முஃப்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் ஆகியோரும், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சரும் இதில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கும் இந்த உடல்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஜூலை 9 அன்று மஷ்ஹாரில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளன.
