CRIME
புனே தொழிலதிபர் கொலை வழக்கு..! காதலனுடன் சேர்ந்து தீட்டிய சதித் திட்டம்… காட்டிக் கொடுத்த மணமகளின் ‘ஸ்னாப்சாட்’ ரகசியம்..!!
மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயலின் ‘ஸ்னாப்சாட்’ உரையாடல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 18-ஆம் தேதி, 26 வயதான கேதனை அவரது மணமகள் சியா கோயல் மற்றும் சியாவின் காதலன் சேத்தன் சவுத்ரி ஆகிய இருவரும் இணைந்து லோஹாகாட் கோட்டை மலை உச்சியிலிருந்து கீழே தள்ளி கொடூரமாகக் கொலை செய்தனர். இது தொடர்பாக புனே கிராமப்புற போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கொலை நடப்பதற்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு, சியா கோயல் தனது தோழியுடன் நடத்திய ஸ்னாப்சாட் சாட்டின் ஸ்கிரீன்ஷாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு திருமணத்திற்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்வதற்காகத் தன் தோழியின் ஆதார் கார்டைக் கேட்கும் சியா, தோழி அதுகுறித்துக் கேள்வி எழுப்பியபோது, “நடக்கவே போவதில்லை என்று எனக்குத் தெரிந்த ஒரு கல்யாணத்திற்காகத்தான் நான் டிக்கெட் புக் செய்கிறேன், நீ ஆதார் கார்டை மட்டும் அனுப்பு” என்று மிகவும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். தனக்கும் கேதனுக்கும் நடக்கவிருந்த திருமணத்தைத்தான் அவர் ‘நடக்கப்போவதில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த குறுஞ்செய்தி மூலம் சியாவிற்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை என்பதும், கேதனை முன்கூட்டியே திட்டமிட்டு கொலை செய்ய அவரும் அவரது காதலனும் சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என்பதும் தெளிவாக நிரூபணமாகிறது. ஏற்கனவே, பாலி தீவு பயணத்தின் போது கேதனின் பாஸ்போர்ட்டை சியா திருடியது மற்றும் ஜூன் 14 அன்று இதே மலைப்பகுதியில் பாம்பைக் காட்டி அவரைக் கீழே தள்ளிவிட முயன்றது போன்ற திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது கிடைத்துள்ள இந்த ஸ்னாப்சாட் சாட் வழக்கு விசாரணைக்கு மிக முக்கிய டிஜிட்டல் ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது. குற்றவாளிகள் இருவருக்கும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் நீதிமன்ற அனுமதியைக் கோரியுள்ளனர்.
