LATEST NEWS
நாக்பூரில் சோகம்..! மனதை உலுக்கும் காட்சி… மின்னல் தாக்கி மாடு பலி… தோளில் நுகத்தடி சுமந்து தந்தைக்கு உதவிய விவசாயியின் மகன்..!!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டம் பிவாபூர் தாலுகாவில் உள்ள செலோட்டி கிராமத்தில் நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜூன் 25 அன்று அப்பகுதியில் பெய்த பலத்த மழையின் போது, தன்மா மர்கடே என்ற விவசாயியின் ஜோடி மாடுகளில் ஒரு மாட்டின் மீது மின்னல் தாக்கியது. இந்த விபத்தில் அந்த மாடு பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் அந்த ஏழை விவசாயிக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது.
தற்போது காரிஃப் சாகுபடி சீசன் உச்சத்தில் இருப்பதால், சோயாபீன்ஸ் விதைகளை உரிய நேரத்தில் விதைக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த விவசாய குடும்பம் இருந்தது. ஆனால், கடுமையான பணத்தட்டுப்பாடு காரணமாக அவர்களால் உடனடியாக மற்றொரு புதிய மாட்டினை விலைக்கு வாங்க முடியவில்லை. விவசாயப் பணிகள் முடங்கினால் ஒட்டுமொத்த பயிரும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், அந்த விவசாயியின் மகன் ஒரு மாட்டின் நுகத்தடியைத் தன் தோளில் சுமந்து, மற்றொரு மாட்டுடன் இணைந்து வயலை உழவும், விதைக்கவும் தொடங்கினார்.
விவசாயியின் மகன் மாட்டுடன் சேர்ந்து மனித நேயத்துடன் கடினமாக வயலை உழும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பொதுமக்கள் பலரும் இந்த விவசாயக் குடும்பத்தின் நிலை குறித்து கவலை தெரிவிப்பதோடு, அரசு உடனடியாக அவர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயி தன்மா கூறுகையில், “அரசிடமிருந்து உதவி கிடைத்தால் நிச்சயம் பெற்றுக் கொள்வோம், ஆனால் விதைப்புக்கான உகந்த நேரம் கடந்துவிட்டால் எங்களால் விவசாயத்தை நிறுத்த முடியாது என்பதால், வேறு வழியின்றி இந்த கடினமான முடிவை எடுத்தோம்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
