LATEST NEWS
“அந்த ஏழுமலையனே ஷாக் ஆகிருப்பாரு” 116 வயதில் 3,550 படிகள்.. அசைக்க முடியாத பக்தியால் திருப்பதியை அதிரவைத்த மூதாட்டி – குவியும் வாழ்த்துகள்..!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியான நவநீதம்மாள் என்பவர், திருப்பதி ஏழுமலையானைத் தரிசிப்பதற்காகத் தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்துள்ளார். திருமலைக்கு வாகனங்கள் மூலம் செல்ல வசதி இருந்தபோதிலும், அலிபிரி மலைப்பாதை வழியாகவே நடந்து சென்று சாமி தரிசனம் செய்வேன் என்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார். வயது முதிர்வையும் பொருட்படுத்தாமல், தனது அசைக்க முடியாத பக்தியால் அலிபிரி பாதையிலுள்ள 3,550 படிகளையும் அவர் வெற்றிகரமாக ஏறி முடித்துள்ளார். இந்த வயதிலும் அவர் காட்டிய மனஉறுதியும், படியேறிச் சென்ற காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகிப் பெரும் வைரலாகின.
இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பார்த்த திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர்.நாயுடு, அந்த மூதாட்டியின் அசாத்திய பக்தியைக் கண்டு பெரிதும் வியந்துள்ளார். இதுகுறித்துத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட அவர், 116 வயதில் 3,550 படிகள் ஏறி வந்த நவநீதம்மாளின் பக்தி அனைவருக்கும் பெரும் உத்வேகம் அளிப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த மூதாட்டிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏழுமலையானின் சிறப்பு வி.ஐ.பி தரிசனம் வழங்கத் தான் விரும்புவதாகவும், அவர்களைப் பற்றிய விவரங்கள் தெரிந்தால் திருமலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தை உடனே தொடர்பு கொள்ளுமாறும் தேவஸ்தானத் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் திருமலையில் இருந்த நவநீதம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தீவிரமாகத் தேடிக் கண்டுபிடித்தனர். பின்னர், அவர்களைப் பயோமெட்ரிக் மையத்திலிருந்து நேரடியாக அழைத்துச் சென்று, எவ்வித சிரமமும் இன்றி வி.ஐ.பி பிரேக் தரிசனம் மூலம் கோவிலுக்குள் அனுமதித்தனர். இதன் மூலம் அந்த மூதாட்டி ஏழுமலையானை மிக அருகில் கண்டு மனமுருக வழிபட்டார். சாமி தரிசனத்திற்குப் பிறகு, கோவிலின் ரங்கநாயகி மண்டபத்தில் வைத்து அவருக்குப் பட்டுச் சால்வை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டதோடு, தேவஸ்தானத்தின் சார்பில் லட்டு பிரசாதங்களும் முறைப்படி வழங்கப்பட்டன
