LATEST NEWS
நாங்க ஏம்பா TVK ஆட்சியை கலைக்கணும்..? அவங்களே கலைச்சிடுவாங்க.. யார் தெரியுமா..? பகீர் கிளப்பிய உதயநிதி..!!
சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தற்போது நடக்கும் தவெக ஆட்சியை “ரீல்ஸ் ஆட்சி” என்று கடுமையாகச் சாடினார். ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்துவிட்டார்கள், அதைக் கொண்டே ஆட்சியும் நடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். மேலும், தமிழகத்தில் மின்வெட்டு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தவெக அமைச்சர் ஒருவர் சேப்பாக்கம் மைதானத்தில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி மாத்திரையைப் பொடியாக்கிய சம்பவத்தை மக்கள் கண்கூடாகப் பார்த்துள்ளனர் என்றும் விமர்சித்தார்.
திமுக ஆட்சியை கலைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “நாங்கள் ஏன் ஆட்சியைக் கலைக்க வேண்டும்? இந்த ஆட்சியின் அவலங்களைப் பார்த்து மக்களே இதனை கலைத்து விடுவார்கள்” என்று பேசினார். ஊழல் செய்தவர்களை விடமாட்டோம் என்று சட்டப்பேரவையில் கூறிய முதலமைச்சர், தற்போது அதே ஊழல்வாதிகளைத் தன் கட்சிக்குள் இணைத்துக் கொள்வதாகவும், சட்டப்பேரவையில் அவர் பேசுவதைப் பார்த்தால் திரையரங்கில் படம் பார்ப்பது போல உள்ளது என்றும் சாடினார்.
அதிமுகவை பாதியாக உடைத்துவிட்டார்கள், ஆனால் எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார். கடந்த தேர்தலில் தங்களின் உண்மையான எதிரி யார் என்று தெரியாமல் போய்விட்டதாகவும், கூட்டணி வைத்தவர்கள் திமுக வாக்குகளைப் பெற்று அமைச்சர்களாகிவிட்டு, இப்போது பயந்து போய் அமைதியாக இருக்கிறார்கள் என்றும் கூறினார். சோபா மாடல் ஆட்சியின் தவறுகளை மக்களிடம் கொண்டு சென்று, தமிழ்நாட்டில் மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
