LATEST NEWS
அரசியல்வாதிகள் கட்சி மாறினா ஏன் ‘குதிரை பேரம்’னு சொல்றாங்க? .. குதிரைக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?.. இதன் பின்னாடி இருக்கும் சுவாரசிய வரலாறு..!!
19ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் குதிரைச் சந்தைகளில் இருந்து ‘ஹார்ஸ் டிரேடிங்’ அல்லது ‘குதிரை பேரம்’ என்ற சொல் உருவானது. அப்போது போக்குவரத்து மற்றும் விவசாயத்திற்கு குதிரைகள் மிக முக்கியமாகத் தேவைப்பட்டன. குதிரைகளின் உண்மையான வயது மற்றும் ஆரோக்கியத்தை எளிதில் கண்டறிய முடியாது என்பதால், விற்பனையாளர்கள் அதன் குறைபாடுகளை மறைத்து அதிக விலைக்கு விற்க முயல்வர்; வாங்குபவர்கள் விலையைக் குறைக்கப் போராடுவர். இவ்வாறு ரகசிய தந்திரங்கள், ஏமாற்று வேலைகள் மற்றும் கடுமையான வாக்குவாதங்களுடன் நாள் கணக்கில் நடைபெறும் இந்த வியாபார முறை, பின்னாட்களில் நேர்மையற்ற ரகசிய ஒப்பந்தங்களைக் குறிக்கும் சொல்லாக மாறியது.
1890களில் இந்த வார்த்தை அமெரிக்க அரசியல் களத்திற்குள் நுழைந்தது. நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பதவி அல்லது சலுகைகளை ரகசியமாக ஆசை காட்டித் தங்கள் பக்கம் இழுத்தபோது, இச்சொல் பயன்படுத்தப்பட்டது. இந்திய அரசியலில் 1967-ல் ஒரே நாளில் மூன்று முறை கட்சி மாறிய ஹரியானா எம்.எல்.ஏ கயா லால் என்பவரால் ‘ஆயா ராம், கயா ராம்’ என்ற சொற்றொடர் பிரபலமானது. அதன் தொடர்ச்சியாக, பிற்காலத்தில் ஆட்சியைப் பிடிக்கவும் பெரும்பான்மையை நிரூபிக்கவும் எம்.எல்.ஏ-க்களைப் பணம் மற்றும் பதவிகளைக் கொடுத்து இழுக்கும் கலாச்சாரம் அதிகரித்ததால், இந்திய ஊடகங்களிலும் ‘குதிரை பேரம்’ என்ற சொல் பொதுவான ஒன்றாக மாறியது.
தற்போது தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகைக்குப் பிறகு, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களும் கட்சி மாறப்போவதாக வெளியாகும் தகவல்களால் இச்சொல் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தங்களது கட்சிப் பிரதிநிதிகளைத் தவெக ஆசை காட்டி இழுப்பதாக அதிமுகவும், தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க திமுக தரப்பில் பல கோடிகள் பேரம் பேசப்படுவதாக ஆளுங்கட்சி மீதும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொள்கைக்காக இல்லாமல், பணம், பதவி அல்லது அதிகாரத்திற்காக மக்கள் பிரதிநிதிகள் ரகசிய ஒப்பந்தங்கள் மூலம் கட்சி மாறுவதைக் குறிக்கவே இவ்வார்த்தை இப்போதும் பயன்படுத்தப்படுகிறது.
