LATEST NEWS
“ஆதாரத்தை சப்மிட் பண்ணுங்க”.. உதயநிதி ஸ்டாலினுக்கு பெ. சண்முகம் விடுத்த பகிரங்க எச்சரிக்கை.. தமிழகத்தில் வெடித்த புதிய அரசியல் போர்..!!
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்க ஆளுநர் மாளிகையை அணுகலாம் என்ற தற்போதைய ஆளுநரின் அழைப்பு பொருத்தமற்றது என்று விமர்சித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, ஆளுநர் தனது அரசியலமைப்பு அதிகார வரம்பிற்குள் மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், இந்த அணுகுமுறை இதற்கு முன்பு தமிழகத்தில் விமர்சனத்திற்குள்ளான முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளைப் போன்றே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இடைத்தேர்தல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், இடதுசாரிகள் தற்போது மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கியுள்ளதால் தாங்கள் எந்த அணியிலும் இல்லை என்றும், அதே நேரத்தில் த.வெ.க.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், பணப் பலன்களுக்காகவே எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறிய குதிரை பேரக் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்றும், அதற்கான ஆதாரங்களை அவர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறினார். அரசு அதிகாரப்பூர்வக் கூட்டங்களில் தனியார் பங்கேற்பது தொடர்பாக பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய அனைத்துக் கட்சியினருமே ஆளுநரைச் சந்தித்து மனு அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தலில் வெற்றி பெற்ற உடனே பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணையும் எம்.எல்.ஏ.க்களின் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார். இத்தகைய கட்சித் தாவல்கள் வாக்காளர்களின் நம்பிக்கைக்குச் செய்யும் துரோகம் மட்டுமின்றி, மக்கள் மீது தேவையற்ற இடைத்தேர்தல் சுமையைத் திணிக்கிறது என்றும் சண்முகம் சாடினார்.
