DISTRICT NEWS
மர்ம முடிச்சுகள் அவிழுமா?தலை இன்றி மீட்கப்பட்ட சடலங்கள்..உறைந்துபோன கிராம மக்கள்..!
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்களின் சடலங்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் இருந்து வீசிய கடுமையான துர்நாற்றம் காரணமாக, சந்தேகமடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிணற்றிலிருந்து இரு உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மீட்கப்பட்ட சடலங்கள் முற்றிலும் சிதைந்து, அழுகிய நிலையில் இருந்ததால் அவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விபரங்களை உடனடியாகக் கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது. கொலையாளிகள் இவர்களை வேறு எங்காவது கொலை செய்துவிட்டு, அடையாளத்தை மறைப்பதற்காக தலையைத் துண்டித்து உடல்களை இந்தக் கிணற்றில் வீசியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இக்கொடூரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள லால்குடி போலீசார், காணாமல் போனவர்களின் பட்டியலைச் சரிபார்த்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
