LATEST NEWS
“8 ஆண்டு அலட்சியம்… கயிற்றில் தொங்கும் உயிர்கள்..! மரண பயத்தில் பள்ளிக்குச் செல்லும் உத்தராகாண்ட் மாணவர்கள்..!!”
உத்தராகாண்ட் மாநிலத்தின் பாகேஷ்வர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், அண்டை மாவட்டமான பித்தோராகரில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்காக அவர்கள் தினமும் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து, வழியில் உள்ள ராம்கங்கா ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் அங்கிருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக அங்கு புதிய பாலம் எதுவும் கட்டப்படாமல் உள்ளதால், மாணவர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து இந்த ஆற்றைக் கடந்து வருகின்றனர்.
ஆற்றைக் கடப்பதற்காகப் பாலத்திற்கு மாற்றாக ஒரு ட்ராலி அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் கைகளால் மட்டுமே இழுத்து இயக்கப்படும் இந்த ட்ராலியை இயக்க அரசுத் தரப்பில் எந்த ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் பாதுகாப்பாக அக்கரையை அடைய அவர்களது பெற்றோர்கள் தினமும் ஆற்றங்கரை வரை வந்து, தங்களின் கைகளாலேயே இந்த ட்ராலியை இழுத்து மாணவர்களை அக்கரையில் சேர்த்துவிட்டு வருகின்றனர்.
தற்போது பயன்படுத்தப்படும் இந்த ட்ராலி வசதி முற்றிலும் பாதுகாப்பற்ற ஒன்றாக உள்ளது. இதில் பயணம் செய்ய மாணவர்கள் மிகவும் அச்சப்படும் சூழலில், இதுவரை இந்த ட்ராலி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். மாற்று வழி இல்லாததால் ஆபத்தை உணர்ந்தும் மாணவர்கள் இதில் பயணித்து வரும் நிலையில், புதிய பாலம் கட்டித் தரக் கோரி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வைக்கும் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.
