LATEST NEWS
“9.5 கோடியெல்லாம் எனக்கு ஜுஜுபி!”.. சொந்த ஏ.ஐ ஸ்டார்ட்-அப் தான் கெத்து.. மாஸ் காட்டிய ஐ.ஐ.டி பட்டதாரி.. கூகுள், மெட்டாவை அலறவிட்ட இந்திய இளைஞரின் பின்னணி..!!
செயற்கை நுண்ணறிவு துறையில் திறமையான நிபுணர்களுக்கான தேவை உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், ஐ.ஐ.டி மும்பை பட்டதாரியான ரிஷப் அகர்வால், மெட்டா நிறுவனத்தின் கோடிக்கணக்கான ரூபாய் சம்பள வேலையை நிராகரித்துவிட்டு சொந்தமாக ஏ.ஐ. நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். ஜே.இ.இ தேர்வில் அகில இந்திய அளவில் 33-வது இடம் பிடித்து சாதனை படைத்த இவர், ஏற்கனவே கூகுள் பிரைன், டீப்மைண்ட், வேமோ உள்ளிட்ட முன்னணி ஏ.ஐ. நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவருக்கு மெட்டா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 1 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.9.5 கோடி சம்பளத்துடன் கூடிய உயரிய வேலைவாய்ப்பை வழங்க முன்வந்த போதிலும், அதைத் துணிச்சலுடன் மறுத்து ‘பீரியாடிக் லேப்ஸ்’ என்ற ஏ.ஐ. ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை இணை நிறுவனராகத் தொடங்கியுள்ளார்.
மெட்டா நிறுவனம் தமக்கு வழங்க முன்வந்த தொகை, வெளியில் பேசப்படும் 1 மில்லியன் டாலரை விட பல மடங்கு அதிகம் என்று ரிஷப் அகர்வால் குறிப்பிட்டுள்ளாரே தவிர, அதன் சரியான மதிப்பை அவர் வெளியிடவில்லை. தொழில்முனைவு முயற்சியில் அவர் எடுத்துள்ள இந்த அதிரடி மற்றும் துணிச்சலான முடிவு தொழில்நுட்ப துறையில் தற்போது பரவலான கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சமூக வலைத்தளங்களில் பிரபல தொழிலதிபர் நிகேஷ் அரோரா உள்ளிட்ட பலரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. திறமையான ஏ.ஐ. நிபுணர்களைத் தக்கவைத்துக்கொள்ள உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் எவ்வளவு பெரிய தொகையையும் முதலீடு செய்யத் தயாராக இருக்கின்றன என்பதையும், அதே சமயம் இன்றைய இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கிச் சொந்தமாகக் கால்பதிக்க விரும்புவதையும் இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
