LATEST NEWS
தமிழகத்திற்குப் பலத்த அடி! ரூ.38,000 கோடி ஹூண்டாய் முதலீடு ஆந்திராவிற்குத் தாவுகிறது..? பாய்ண்ட்டை பிடித்த ஈபிஎஸ்.. தவெக அரசுக்கு நெருக்கடி..!!
தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் தமிழ்நாட்டில் மேற்கொள்ளவிருந்த ரூ.38,000 கோடி மதிப்பிலான மெகா முதலீடு ஆந்திரப் பிரதேசத்திற்கு மாறக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கவலை தெரிவித்துள்ளார். 1990-களிலிருந்தே தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்து வரும் ஹூண்டாய் போன்ற உலகத் தரம் வாய்ந்த நிறுவனம், தற்போது மாற்று மாநிலத்தை நோக்கி நகர்வது தற்போதைய தவெக அரசின் மீதான தொழில் முதலீட்டு நம்பிக்கைக் குறைவையே காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மிகவும் வலுவாக உருவாக்கப்பட்ட “Guidance Tamil Nadu” நிறுவனம் தற்போதைய ஆட்சியில் முற்றிலும் பலவீனமடைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அந்த அமைப்பில் இருந்து முக்கிய உயர்தர அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகி வருவது கவலையளிப்பதாகவும், தொழில்துறை அமைச்சர் விளம்பர அரசியலில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மாநில தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
ரூ.38,000 கோடி முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் அண்டை மாநிலத்திற்குச் சென்றால் அது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும் என்பதால், அரசு உடனடியாக உயர்மட்டக் குழுவை அமைத்து ஹூண்டாய் நிறுவனத்துடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இந்த முதலீட்டு விவகாரம் தற்பொழுது தமிழக தொழில் மற்றும் அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
