LATEST NEWS
“இனி இஷ்டத்துக்கு வாங்க முடியாது! “சாதாரண சிரப்-தானேனு நினைச்சா அவ்ளோதான்! மத்திய அரசின் அதிரடி உத்தரவு..!!
பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மருந்துக்கடைகளில் விற்கப்படும் ஆல்கஹால் கலந்த இருமல் மருந்துகள் மற்றும் சில திரவ மருந்துகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை அதிரடியாக விதித்துள்ளது. இனிமேல், மருந்தகங்களுக்குச் சென்று மக்கள் தங்களுக்கு இஷ்டப்பட்டபடி சில குறிப்பிட்ட மருந்துகளை நேரடியாக வாங்க முடியாது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மருந்துகளின் பயன்பாட்டை வரைமுறைப்படுத்தவுமே இந்த புதிய விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
புதிய விதிகளின் அடிப்படையில், 12 சதவீதத்திற்கும் அதிகமாக ஆல்கஹால் கலந்துள்ள மற்றும் 30 மில்லி லிட்டருக்கும் அதிகமான அளவு கொண்ட பாட்டில்களில் விற்கப்படும் திரவ மருந்துகள் அனைத்தும் இனி ‘அட்டவணை எச்-1’ பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால், பதிவு பெற்ற மருத்துவரின் முறையான பரிந்துரைச் சீட்டு இல்லாமல் எந்த ஒரு மருந்தகத்திலும் இந்த இருமல் மருந்துகளையோ அல்லது ஊக்கத் திரவங்களையோ நேரடியாக வாங்க இயலாது. மேலும், அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தப்படும் சாதாரண மருந்துகளின் பட்டியலிலிருந்து ‘சிரப்’ என்ற வார்த்தையையும் அரசு நீக்கியுள்ளது.
சில வகையான இருமல் மருந்துகள் மற்றும் திரவங்கள் போதைக்காகவோ அல்லது தவறான நோக்கத்திற்காகவோ பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவே இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள் குறித்த மருந்துகள் அனைத்தும் பாதுகாப்பற்றவை என்றோ அல்லது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுவிட்டன என்றோ அர்த்தமல்ல என்று அரசு விளக்கம் அளித்துள்ளது. மாறாக, அவற்றின் விற்பனையைத் தீவிரமாகக் கண்காணித்து, மருத்துவரின் ஆலோசனையோடு மட்டுமே சரியான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
