LATEST NEWS
“500 அப்ளிகேஷன்… 0 இன்டர்வியூ..!” பெங்களூரு இன்ஜினியரிங் பட்டதாரியின் குமுறல்.. இணையத்தில் வைரலாகும் ரெடிட் பதிவு..!!
பெங்களூரைச் சேர்ந்த ஒரு இளம் பி.டெக் பட்டதாரி, வேலை தேடி தனக்கு ஏற்பட்ட ஏமாற்றமான அனுபவத்தை ரெடிட் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 2026 ஆம் ஆண்டு படிப்பை முடித்த அவர், கடந்த ஒரே மாதத்தில் லிங்க்ட்இன், நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் பல்வேறு வேலைவாய்ப்பு செயலிகள் மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு வேலைக்காக விண்ணப்பித்துள்ளார். ஆனால், இவ்வளவு முயற்சிகள் செய்தும் அவருக்கு ஒரு நிறுவனத்தில் இருந்து கூட நேர்காணலுக்கான அழைப்பு வரவில்லை.
இந்த பதிவில் அவர் தனது தற்போதைய முக்கிய நோக்கம் பெரிய சம்பளம் சம்பாதிப்பது அல்ல என்றும், ஐடி துறையில் பணிபுரிந்து அனுபவத்தைப் பெறுவது மட்டுமே தனது குறிக்கோள் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்பம் சார்ந்த எந்தவொரு பணிக்கும் தான் தயாராக இருந்தபோதிலும், பல நிறுவனங்கள் தனது விண்ணப்பத்தை ஏன் நிராகரித்தன என்ற காரணத்தைக்கூட தெரிவிக்காமல் மௌனம் காப்பது தனது தன்னம்பிக்கையை உலுக்குவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், மற்றவர்களின் ஆலோசனையைப் பெறுவதற்காகவே இந்த பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.
இணையத்தில் வைரலான இந்த ரெடிட் பதிவு, தற்காலத்தில் புதிய பட்டதாரிகள் வேலை தேடுவதில் சந்திக்கும் பெரும் சவால்களைப் பற்றிய விவாதத்தை நெட்டிசன்கள் மத்தியில் கிளப்பியுள்ளது. பல இளைஞர்கள் தங்களுக்கும் இதேபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டதாகக் கூறி தங்களின் ஆதங்கத்தைப் பகிர்ந்து வருகின்றனர். வேலை கிடைப்பது முன்பை விட இப்போது மிகவும் கடினமாகிவிட்டதாகவும், குறிப்பாக நேர்காணலின் இறுதிச் சுற்று வரை சென்று நிராகரிக்கப்படும்போது ஏற்படும் ஏமாற்றம் மற்றும் நிறுவனங்கள் முறையான பதில் தராதது தங்களின் மனநிறைவைக் கெடுப்பதாகவும் பல பயனர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
