LATEST NEWS
மெனுவில் ரூ.200.. பில்லில் ரூ.300…! கேரள ‘சோறும் மீனும்’ உணவகத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஊழியர்கள்… நியாயம் கேட்ட வாடிக்கையாளர் மீது தாக்குதல் நடத்தி ரணகளமாக்கிய அதிர்ச்சி வீடியோ..!!
கேரளாவில் இயங்கி வரும் பிரபல ‘சோறும் மீனும்’ உணவகத்தில், மெனு கார்டில் ரூ.200 எனக் குறிப்பிடப்பட்டிருந்த மீன் உணவுக்கு, பில் தொகையில் ரூ.300 சேர்த்துக் கேட்கப்பட்டதால் வாடிக்கையாளருக்கும் உணவக ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. விலைப்பட்டியலை விட ரூ.100 கூடுதலாக வசூலிக்கப்பட்டதற்கு வாடிக்கையாளர் நியாயம் கேட்டபோது, அங்கிருந்த ஊழியர்கள் முறையான விளக்கம் தராமல் அலட்சியப் போக்குடன் பதிலளித்ததாகத் தெரிகிறது.
இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றிப்போய், இரு தரப்பினருக்கும் இடையே பெரும் கைகலப்பாக மாறியது. உணவகத்திற்குள்ளேயே ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திக்கொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி, சமூக வலைதளப் பக்கங்களில் அதிவேகமாகப் பரவி வருகிறது.
https://www.instagram.com/reel/Db7zGFaCuZ3/?utm_source=ig_web_button_share_sheet
இச்சம்பவம் வெளிவந்ததைத் தொடர்ந்து, உணவகங்களில் வாடிக்கையாளர்களிடம் மறைமுகமாகவும் சட்டவிரோதமாகவும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறைகேடான போக்கிற்கு நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற நியாயமற்ற நடைமுறைகளில் ஈடுபடும் உணவகங்களின் மீது நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உடனடியாக தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
