LATEST NEWS
“நான் ஒன்னும் ஓடவும் இல்ல.. ஒளியவும் இல்ல!”.. சென்னை திரும்பிய எ.வ. வேலு அதிரடி.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!
சிங்கப்பூரில் கடந்த 2016ஆம் ஆண்டு முதலே தாம் இதயம் தொடர்பான பிரச்சினைக்காகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக, சென்னை திரும்பிய தமிழக அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தனது அடுத்தகட்ட சிகிச்சைக்காகக் கடந்த மாதம் 15ஆம் தேதியே விசாவுக்கு விண்ணப்பித்து, 17ஆம் தேதி அனுமதி கிடைத்தவுடனேயே டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்துவிட்டதாக அவர் விளக்கமளித்தார். தாம் எங்கும் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை என்றும், தங்களை தி.மு.க தலைமை அப்படி வளர்க்கவில்லை என்றும் அவர் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் எ.வ. வேலு திட்டவட்டமாகக் கூறியுள்ளார். திட்டமிட்டபடி வரும் ஜூலை 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அதிகாரிகளின் முன்பாக தாம் நேரில் ஆஜராகப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். தனது வெளிநாட்டுப் பயணம் முற்றிலும் மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள அவர், சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்துள்ளார்.
