LATEST NEWS
BREAKING:வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.. புதிய உச்சம்..!!
சென்னையில் இன்று ஒரே நாளில் எரிபொருட்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மாற்றத்தின்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.69 கூடி ரூ.109.45-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.71 எகிறி ரூ.101.26-க்கும் விற்பனையாகிறது. இந்த திடீர் விலையேற்றம் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக நூறு ரூபாய்க்குக் கீழ் இருந்த டீசல் விலை, இந்த திடீர் உயர்வால் மீண்டும் ரூ.100-ஐ கடந்துள்ளதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயருமோ என்ற அச்சத்தில் நடுத்தரக் குடும்பங்களும் வாகன ஓட்டிகளும் கலக்கம் அடைந்துள்ளனர்.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கடுமையான போர் பதற்றம் காரணமாக, உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது. இதன் நேரடி எதிரொலியாகவே உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தத் தொடங்கியுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேசச் சூழல் இதே நிலையில் நீடித்தால், வரும் நாட்களிலும் எரிபொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் என்ற கவலை நுகர்வோர் மற்றும் வர்த்தகத் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.
