LATEST NEWS
மாரடைப்பா? வேறு காரணமா?… சிறையில் விசாரணைக் கைதிக்கு நேர்ந்த விபரீதம்… போலீசார் தீவிர விசாரணை…!!
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதான சபரிவர்மன் என்பவர், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்ற குற்றத்திற்காக காவல்துறையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். சுமார் 200 கிராம் குட்கா விற்பனை செய்த வழக்கில் சிக்கிய இவர், கடந்த ஜூலை 9-ஆம் தேதி நாகர்கோவில் மாவட்ட சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த அவருக்கு ஜூலை 12-ஆம் தேதி நள்ளிரவில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, உடனடியாக அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தனர்.
தற்போது சபரிவர்மனின் மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து நேசமணி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறையிலிருந்த விசாரணைக் கைதி திடீரென மரணமடைந்த நிகழ்வு, அந்த வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
