LATEST NEWS
“பார்ட்டி பண்ண பணம் வேணும்…!” அத்தையைக் கொன்று நகை.. பணத்தை அள்ளிய ஜோடி… மாட்டிக்கொண்டது எப்படி..?!
ஜெய்பூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணமான 40 வயது பெண் லலிதா என்பவரும், அவரது 26 வயது காதலன் பாப்லு மீனா என்பவரும் தங்களது ஆடம்பர வாழ்க்கைக்கும், மது விருந்துகளுக்கும் பணம் தேவைப்பட்டதால், அந்தப் பெண்ணின் 65 வயது அத்தையான கமலா தேவி என்பவரைக் கொலை செய்துள்ளனர். கடந்த ஜூலை 30 அன்று, சாம்பார் பகுதியில் உள்ள தனது வீட்டில் கமலா தேவி பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். மேலும், அவரது வீட்டிலிருந்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணமும் திருடப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, கமலா தேவியின் மருமகன் பிரகாஷ் நாராயண் சர்மா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்த காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் கமலா தேவியின் உறவினர் லலிதாவைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவரது காதலன் பாப்லு மீனாவையும் காவல்துறையினர் கைது செய்தனர். குற்றத்தைச் செய்வதற்கு முன்பு அவர்கள் அந்த வீட்டை நோட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ரொக்கப் பணம், ஏடிஎம் கார்டு மற்றும் அடையாள ஆவணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் இரண்டு தங்க வளையல்கள், தங்க தோடுகள், மூக்குத்தி, வெள்ளி கொலுசுகள், வெள்ளி நாணயங்கள், மெட்டி மற்றும் வெள்ளிப் பொருட்கள் அடங்கும். தங்களது ஜாலியான வாழ்க்கை முறையையும் பார்ட்டி செலவுகளையும் சமாளிக்கவே இந்த கொடூரக் குற்றத்தைச் செய்ததாகக் குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.
