LATEST NEWS
உஷார்..! பணமும் போச்சு… பொருளும் போச்சு… சோப்புத்தூள் கொடுத்த ஆன்லைன் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் கொடுத்த அதிரடி ஷாக்..!!
ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ரூ.1.98 லட்சம் செலுத்தி கிராபிக்ஸ் கார்டு ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு, அதற்குப் பதிலாக 1 கிலோ துணி துவைக்கும் டிடர்ஜென்ட் பவுடர் பாக்கெட் டெலிவரி செய்யப்பட்ட விசித்திரமான சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட இ-காமர்ஸ் நிறுவனத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்விதத் தீர்வும் கிடைக்காததால், மன உளைச்சலுக்கு ஆளாகி அவர் நுகர்வோர் ஆணையத்தை நாடினார்.
நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்ட பின்னரே, பாதிக்கப்பட்ட நபருக்கு அவர் செலுத்திய ரூ.1.98 லட்சம் தொகை முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும், ஆன்லைன் ஆர்டர் ஸ்கிரீன்ஷாட்கள், இன்வாய்ஸ் பில் மற்றும் டெலிவரி செய்யப்பட்ட டிடர்ஜென்ட் பாக்கெட்டின் புகைப்படங்கள் போன்ற வலுவான ஆதாரங்களுடன், தனக்கு ஏற்பட்ட கடும் அலைக்கழிப்பு மற்றும் மன உளைச்சலுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் வாடிக்கையாளர் உறுதியாக இருந்து வழக்கை நடத்தினார்.
இந்த வழக்கை விசாரித்த மேற்கு வங்க நுகர்வோர் ஆணையம், பெரும் தொகையைச் செலுத்திவிட்டுப் பொருளும் கிடைக்காமல் வாடிக்கையாளரைக் கடுமையான வேதனைக்கு உள்ளாக்கியதற்காக ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. இதில் மன உளைச்சலுக்கான நஷ்டஈடு ரூ.15,000 மற்றும் வழக்குச் செலவுத் தொகை ரூ.15,000 ஆகியவற்றை இ-காமர்ஸ் நிறுவனமும், விற்பனையாளரும் இணைந்து 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற ஆன்லைன் மோசடிப் பிரச்சினைகளைச் சந்திக்கும் நுகர்வோர் 1915 என்ற தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் எண்ணை அழைத்துத் தங்களின் புகார்களைப் பதிவு செய்யலாம் என்றும் நுகர்வோர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
