“யாரைக் கேட்டு இங்க தலைமைச் செயலகம் கட்டுறீங்க..?” மீனவர்களுக்காக களத்தில் இறங்கிய ஸ்டாலின்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“யாரைக் கேட்டு இங்க தலைமைச் செயலகம் கட்டுறீங்க..?” மீனவர்களுக்காக களத்தில் இறங்கிய ஸ்டாலின்..!!

Published

on

மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் த.வெ.க. அரசின் தன்னிச்சையான முடிவு கடும் கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் திமுகவின் ஆதரவைக் கோரி மீனவச் சங்கத்தினர் அண்ணா அறிவாலயத்தில் அவரைச் சந்தித்த நிலையில், மீனவ மக்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு திமுக முழு ஆதரவைத் தரும் என்றும், அரசு தனது முடிவில் இருந்து பின்வாங்கும் வரை மீனவர்களுடன் உறுதியாகத் துணைநிற்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகம் கட்ட எத்தனையோ இடங்கள் இருக்கின்றன என்றும், ஏற்கெனவே கலைஞர் ஆட்சியின்போது கட்டப்பட்ட ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் செயல்படும் மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு அதையே தலைமைச் செயலகமாகப் பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ள அவர், கடற்கரையைப் பார்த்தபடி முதலமைச்சரின் அலுவலகம் அமைய வேண்டும் என ஜோதிடர் சொன்னதாலேயே பட்டினப்பாக்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாகச் செய்திகள் வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருவரின் ஆசைக்காக ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தமிழ்நாடு அரசு தற்போது தேர்ந்தெடுத்துள்ள இடத்தைச் சுற்றி ஏராளமான பள்ளிகள் அமைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது கடுமையான போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதி என்பதால், இங்கு தலைமைச் செயலகம் அமைந்தால் மாணவர்களும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாக நேரிடும். மேலும், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள பகுதிக்கு தெற்கில் முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம் ஆகிய கிராமங்களும், வடக்கில் ராஜீவ் காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜ்புரம், டூமில் குப்பம், நொச்சி நகர், நொச்சிக்குப்பம் என 12 குடியிருப்புப் பகுதிகள் ஒரு கிலோ மீட்டருக்குள்ளாகவே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முள்ளிக்குப்பம் பஞ்சாயத்து மற்றும் மீனவ மக்கள் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இந்த ஆட்சி அமைய ஆதரவு தந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமையாது என நினைத்ததாகவும், ஆனால் அவர்களின் எதிர்ப்பையும் மீறி த.வெ.க. அரசு விடாப்பிடியாக இருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மீனவர்களின் அழுகுரலுக்குச் செவிமடுத்து அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதாக முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்து அப்பகுதியில் மீனவர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டித்தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அராஜகப் போக்குடனும் ஆணவ எண்ணத்துடனும் பணிகளைத் தொடர்ந்தால், மீனவர்களுடன் இணைந்து திமுக மிகப் பெரிய போராட்டத்தினை முன்னெடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in