LATEST NEWS
“என் வயிற்று வலியை இனி யார் தீர்ப்பா..?” 5 நாள் குழந்தையை எரித்துக் கொன்ற ஏசி வெடிப்பு.. கலெக்டரிடம் நீதிகேட்டு கதறிய அழுத தந்தை..!!
தெலுங்கானா மாநிலம் அதிலாபாத் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட ஏசி வெடிவிபத்தில், தனது 5 நாட்களேயான பச்சிளம் குழந்தையைப் பறிகொடுத்த தந்தையின் கதறல் அங்கிருந்தவர்களை உறைந்துபோகச் செய்துள்ளது. விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் ராஜர்ஷி ஷாவிடம், “ஐயா, என் 5 நாள் குழந்தை இறந்துவிட்டது, இப்போது நான் என்ன செய்வேன்? என்னுடைய வயிற்று வலியை இனி யார் தீர்ப்பார்கள்?” என்று கண்ணீர் மல்க அந்தத் தந்தை எழுப்பிய கேள்வி ஒட்டுமொத்த மருத்துவமனையையும் சோகத்தில் ஆழ்த்தியது.
“இவ்வளவு பெரிய அரசு மருத்துவமனையில் ஒரே ஒரு மருத்துவர் மட்டும்தான் இருக்கிறாரா?” என்று நெஞ்சை உலுக்கும் கேள்வியை அவர் கண்ணீருடன் முன்வைத்தார். மேலும், விபத்தில் சிக்கிய மற்ற குழந்தைகளும் அங்கு முறையான சிகிச்சையின்றி கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார். முறையான பாதுகாப்பு மற்றும் கூடுதல் மருத்துவர்கள் இல்லாததே பச்சிளம் குழந்தையின் மரணத்திற்குக் காரணம் எனப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த விவகாரம் அரசு மருத்துவமனைகளின் அவல நிலையைத் தோலுரித்துக் காட்டியுள்ளதாக நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
