LATEST NEWS
ஐயோ கடவுளே அதிர்ச்சி..! அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: ஏசி வெடித்து 2 பச்சிளம் குழந்தைகள் துடிதுடிக்கப் பலி… 25 குழந்தைகள் காயம்..!!
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில், பிறந்து சில நாட்களே ஆன இரண்டு பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்த மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்காகச் செயல்பட்டு வரும் சிறப்பு வார்டில், மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டன.
அதிகாலையில் திடீரென வார்டில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் குழந்தைகளை மீட்கப் போராடினர். இருப்பினும், இந்தத் தீ விபத்தின் தாக்கத்தால் 2 குழந்தைகள் உயிரிழந்ததுடன், 25 பச்சிளம் குழந்தைகள் காயமடைந்தன. காயமடைந்த குழந்தைகள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை முழுமையாக அணைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குழந்தைகள் வார்டில் இருந்த குளிர்சாதன வசதி (AC) வெடித்ததே இந்தத் தீ விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
