CRIME
“முகத்தில் கைக்குட்டையை வைத்து…” பள்ளி கழிவறைக்குச் சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… மர்ம கும்பல் செய்த காரியம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
சென்னை அடுத்த வண்டலூர் – கேளம்பாக்கம் பிரதான சாலை, கண்டிகை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிவறைக்குச் சென்ற மாணவிக்கு மர்ம கும்பல் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பள்ளி கழிவறைக்குச் சென்ற மாணவி திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து, சக மாணவிகள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்துப் பெற்றோர் விசாரித்த போது, பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று தனது முகத்தில் கைக்குட்டையை வைத்து மூடி பாலியல் தொல்லை அளித்ததாக அந்த மாணவி திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தாழம்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் மருத்துவமனையில் இருந்த மாணவியிடம் சுமார் 3 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தேர்வு பதற்றம் காரணமாகவே மாணவி மயங்கி விழுந்திருக்கலாம் என்றும், பாலியல் தொல்லைக்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் போலீஸார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த 100-க்கும் மேற்பட்ட பெற்றோர், உறவினர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தற்போது பள்ளியை முற்றுகையிட்டும், சாலை மறியலிலும் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பான சூழலும் நிலவி வருகிறது.
