CRIME
தீபாவளி பட்டாசு பதுக்கல்.. சோதனையிடச் சென்ற போலீசாருக்கு நேர்ந்த கொடூர கதி.. நெஞ்சை பதற வைக்கும் பின்னணி..!!
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீபாவளிப் பட்டாசுகள் மற்றும் பொட்டாஷ் வெடிமருந்துகள் திடீரென வெடித்துச் சிதறியதில், அங்கு சோதனையிடச் சென்ற காவல் துறையினர் படுகாயமடைந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தோல்பூரின் பழைய சாவனி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் சட்டவிரோத வெடிபொருட்கள் பதுக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீசார் அங்கு சோதனை நடத்தச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டு, அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த வெடிவிபத்தில் அந்தப் பகுதியே அதிர்ந்ததுடன், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் பலர் தீயின் பிடியில் சிக்கிப் பலத்த தீக்காயங்களுக்கு ஆளாகினர்.
இந்தக் கொடூர வெடிவிபத்தில் சிக்கிய தோல்பூர் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரதீப் குமார் மற்றும் சதர் காவல் நிலையப் பொறுப்பாளர் அமித் குமார் ஆகிய இரு உயர் அதிகாரிகளும் பலத்த காயமடைந்தனர். இருவரின் முகம் மற்றும் கைகளில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தைத் தொடர்ந்து, தோல்பூர் காவல் துறையினர் சட்டவிரோதமாக வெடிபொருட்களைப் பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்; தற்போது தலைமறைவாக இருக்கும் அவரைப் பிடிக்கத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
