LATEST NEWS
“தூய சக்தி இல்ல… தவெக ஒரு திருட்டு சக்தி… கள்வன் கையில் வீட்டுச் சாவியைக் கொடுத்த கதையா போச்சு..” விஜய் சர்க்காரை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ். பாரதி..!!
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஊழலை ஒழிக்கும் உத்தம ஆட்சி போல வேடம் போட்ட தவெக அரசின் முகத்திரையை நீதிமன்றம் கிழித்து தொங்கவிட்டுள்ளதாகச் சாடியுள்ளார். ஆட்சிக்கு வந்தவுடனே அரசு வழக்கறிஞர் நியமனத்தில் கட்சி நிதி திரட்ட தொடங்கிவிட்டதாக புகார்கள் எழுந்ததாகவும், அரசு வழக்கறிஞர் நியமனத்தில் 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை வசூலித்ததாக த.வெ.க.வை சேர்ந்த வழக்கறிஞர் ஞானசுந்தரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் குறிப்பிட்ட அவர், இந்த ஊழல் தொடர்பாக திமுக துணை அமைப்புச் செயலாளர் ப. தாயகம் கவி அளித்த புகாரை விசாரிக்காமல், புகார் அளித்த வழக்கறிஞரையே கட்சியை விட்டு நீக்கிவிட்டு வழக்கை மூடி மறைக்கப் பார்த்ததாகக் குற்றம்சாட்டினார். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு 15 லட்சம் ரூபாய் வரை லஞ்ச பேரம் நடத்திய தவெக நிர்வாகி அனீஸ் என்பவரது ஆடியோ தொடர்பாக ஜெகன் ராஜ் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தவெக அரசை கடுமையாகச் சாடியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“லஞ்சம் கொடுத்து வழக்கறிஞர்களாக வர வேண்டுமா? இவர்கள் நாட்டை காப்பாற்றுவார்களா அல்லது சட்டத்தைப் பாதுகாப்பார்களா?” என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், உடனடியாக இப்புகார் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அரசு வழக்கறிஞர் நியமன ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முன்கூட்டியே புகார் அனுப்பப்பட்டும் ஏன் இன்னும் விசாரணையைத் தொடங்கவில்லை என்றும், லஞ்சம் தொடர்பான ஆடியோ ஆதாரங்கள் இருந்தும் ஏன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை என்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் மந்தமான செயல்பாட்டை நீதிமன்றம் நேரடியாகச் சாடியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஊழலை மூடி மறைக்க முயன்ற விஜய் சர்க்காருக்கு உயர்நீதிமன்றம் சவுக்கடி கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த அரசு வழக்கறிஞர் நியமன ஊழல் மூலம் பெறப்பட்ட பல கோடி ரூபாய் தவெக கட்சி நிதிக்கு வசூலிக்கப்பட்டதா என்பது பற்றியும், இதற்குப் பொறுப்பான சட்டத்துறை அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்யுமா என்றும் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். தூய சக்தி என கொடுத்து வந்த பில்டப்பை காப்பாற்ற லஞ்ச ஒழிப்புத் துறையை தவெகவின் கிளை அமைப்பாகப் பயன்படுத்தி வந்த நிலையில், இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தவெக ஒரு திருட்டு சக்தி என்பதை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் அவதூறுகளை அள்ளிக்கொட்டி மக்களை மடைமாற்றும் அமைச்சர் நிர்மல் குமாரிடம் நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் உண்டா என்றும், உத்தமர் வேடம் போட்ட விஜய் சார் எங்கே போனார் என்றும் கேள்வி எழுப்பியுள்ள அவர், கள்வன் கையில் வீட்டுச் சாவியைக் கொடுத்த கதையாய் தற்போது தமிழ்நாடு மாட்டியுள்ளதாகவும், விரைவில் இந்த கூட்டத்திற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
