LATEST NEWS
2,538 அரசு ஊழியர்களின் லிஸ்ட் ரெடி… K.N. நேருவின் ரூ.634 கோடி வழக்கில் DVAC எடுத்த தடாலடி முடிவு..! அரசியல் வட்டாரத்தில் உச்சகட்ட பரபரப்பு..!!
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த K.N. நேருவுக்கு எதிரான ரூ.634 கோடி பணி நியமன ஊழல் புகாரில், லஞ்சம் கொடுத்து வேலை பெற்றதாகக் கருதப்படும் 2,538 அரசு ஊழியர்களிடம் நேரில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி திட்டமிட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் வரும் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு நபருக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை பெரும்தொகையை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக பணி நியமனங்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தில் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு பல்வேறு முக்கிய ஆவணங்களைத் திரட்டியதோடு, K.N. நேரு மீது வழக்குப்பதிவு செய்ய மாநில அரசிடம் முறைப்படி அனுமதி கோரியது.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, முடங்கிக் கிடந்த இந்த வழக்கின் விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது வேகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக, சட்டவிரோதமாகப் பணியமர்த்தப்பட்டதாகக் கூறப்படும் 2,538 ஊழியர்களுக்கும் விரைவில் அழைப்பாணை அனுப்பி, அவர்களது நியமன நடைமுறைகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது. மத்திய புலனாய்வு அமைப்புகளின் நெருக்கடியும், DVAC-ன் இந்த அதிரடி நடவடிக்கையும் தமிழக அரசியல் மற்றும் அரசு நிர்வாக வட்டாரங்களில் மிகப்பெரிய பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
