LATEST NEWS
“அவங்க பெட்டி பாமா இல்ல.. பல்டி பாமா.. அமைச்சர் சொன்னதும் ஓ-னு அழுதாங்க..!” விஜய்யின் பிரசார நாடகத்தை அம்பலப்படுத்திய உதயநிதி.. சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் திமுக வேட்பாளர் எஸ். சுகன்யாவை ஆதரித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த தேர்தலில் தனக்கு வாக்களிக்காமல் ஏமாற்றிய வாக்காளர்களை நகைச்சுவையாக விமர்சித்துப் பேசினார். பிரசாரக் கூட்டத்தில் மக்கள் மத்தியில் பேசிய அவர், “கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இதே தாராபுரத்திற்கு வந்து நான் உங்களிடம் வாக்கு கேட்டபோது, ‘திமுகவை ஜெயிக்க வைத்து விடுகிறோம், நீங்கள் தைரியமாகப் போயிட்டு வாருங்கள்’ என்று கூறி எனக்குப் பெரிய அல்வா கொடுத்துவிட்டீர்கள்” என்று குறிப்பிட்டார். கடந்த தேர்தலில் திமுக இங்கு தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டி அவர் அடித்த இந்த ‘அல்வா’ ஜோக் தொண்டர்களிடையே பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியது. மேலும், “நீங்கள் பெட்டி பாமாவுக்கு ஓட்டு போட்டால் அவர் நூறில் ஒருவராகத்தான் இருப்பார், ஆனால் சுகன்யாவுக்கு வாக்களித்தால் அவர் உங்களில் ஒருவராக நிச்சயம் இருப்பார்” என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், தற்போதைய தவெக அரசு எவ்வாறு குறுக்கு வழியில் ஆட்சியமைத்தது என்பது குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “கடந்த தேர்தலில் தனிப் பெரும்பான்மைக்கு 118 எம்.எல்.ஏ-க்கள் தேவைப்பட்ட நிலையில், தவெக வெறும் 107 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், நமது கூட்டணியில் இருந்து கொண்டு, நமது தலைவரின் பெயரைச் சொல்லியும், புகைப்படத்தைக் காட்டியும், திராவிட மாடல் சாதனைகளைக் கூறியும் வாக்கு கேட்டு வென்றவர்கள், பின்னர் சொல்லாமலேயே ‘துரோகம்’ செய்து தவெக-வோடு இணைந்து ஆட்சியமைக்க உதவினர்; அந்தத் துரோகிகளை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம்” என்று ஆவேசமாகப் பேசினார். அதுமட்டுமின்றி, அதிமுக-வை இரண்டாக உடைத்து, சில எம்.எல்.ஏ-க்களைப் பெட்டி கொடுத்து தவெக வாங்கியதாகவும், அதன் காரணமாகவே ஆளுங்கட்சி வேட்பாளருக்குப் ‘பெட்டி பாமா’ என்று மக்கள் பெயரிட்டுள்ளதாகவும் அவர் சாடினார்.
நேற்று தனது தலைவர் பேசியதை மேற்கோள் காட்டிய உதயநிதி, “அவர் பெட்டி பாமா இல்லை, ‘பல்டி பாமா’. அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தில் மக்கள் வாக்களித்து மே 12-ல் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்க இருந்தவர், வெறும் 12 நாட்களில் மே 25 அன்று சபாநாயகரைச் சந்தித்துக் கட்சி மாறுவதாகக் கூறி, பெட்டியை வாங்கிக்கொண்டு ராஜினாமா செய்தார். இன்று அதே நபர் வேறு சின்னத்தில் மீண்டும் உங்களிடம் வாக்கு கேட்கிறார் என்றால், தாராபுரம் மக்கள் ஏமாளிகள், சுயமரியாதை இல்லாதவர்கள் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார். மேலும், தாராபுரத்திற்குப் பிரசாரத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய் சட்டசபையில் காது கிழியக் கத்துவதாகவும், தாராபுரத்திற்கு வந்தவுடன் பின்னாடி இருந்த அமைச்சர் ‘பெர்ஃபாமன்ஸ் ஆரம்பிங்க’ என்று கூறியதும் வேட்பாளர் பாமா ‘ஓ’ என்று அழுததாகக் கூறி, “அந்த அம்மா அழுவதற்குப் பதிலாக, அவருக்கு ஓட்டுப் போட்ட நீங்கள்தான் அழ வேண்டும்” என்று கூறிப் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
