LATEST NEWS
“வாரத்துல 3 நாள் சிக்கன்… சொந்த டிரஸ்..” சிறையில கூட ராஜ வாழ்க்கையா..? அன்பில் மகேஷுக்கு புழல் சிறையில் கொடுக்கப்படும் விஐபி வசதிகள்..!!
சென்னை புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு கிடைக்கும் சலுகைகள் என்ன? என்ற விவரம் வெளியாகியுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி, அப்போதைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.100 கோடிக்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு, கோர்ட்டு உத்தரவுப்படி முதல் வகுப்பு அறை வழங்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு அறையில் அன்பில் மகேஷ்க்கு கிடைக்கும் வசதிகள் என்னென்ன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, புழல் சிறையில் அவருக்கு கழிப்பறை வசதியுடன் கூடிய தனி அறை வழங்கப்பட்டுள்ளது. அந்த அறையில் கட்டில், மெத்தை, மின்விசிறி, நாற்காலி மற்றும் மேஜை போடப்பட்டுள்ளது. மற்ற கைதிகள் அணிவது போன்று சிறைச்சாலையில் வழங்கப்படும் சீருடையை அவர் அணிய வேண்டியதில்லை. சொந்த உடையையே அணிந்து கொண்டுள்ளார். வழக்கமான சிறை உணவுடன் அவருக்கு கூடுதலாக சப்பாத்தி, பால், டீ வழங்கப்படும். வாரத்தில் 3 நாட்கள் சிக்கன் வழங்கப்படும்.
சிறையில் உள்ள உணவகத்தில், சாதாரண கைதிகள் வாரந்தோறும் ரூ.750-க்கு பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்ற அனுமதி உள்ளது. ஆனால், முதல் வகுப்பு கைதிகளுக்கு ரூ.1,000 வரை பொருட்கள் வாங்க அனுமதி உண்டு. முதல் வகுப்பு கைதிகள் பொழுதுபோக்கிற்கு பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி வசதி உண்டு. மேலும், தொலைப்பேசி வசதியும் செய்து கொடுக்கப்படும். இதேபோல், சிறை நிர்வாகத்தின் அனுமதியுடன் சில பொருட்களை வெளியில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனே மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை பெற முடியும்.
