CRIME
“என் அப்பாவைக் காப்பாத்தத்தான்..” நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறிய காவலர்.. உருக வைக்கும் வாக்குமூலம்..!!
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மீர்பேட்டை காவல் நிலையத்தில், தன் தந்தையின் மருத்துவச் செலவுக்காகக் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் அலைபேசிகளைத் திருடி அடகு வைத்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணம், தங்க நகைகள் மற்றும் செல்போன்கள் மாயமானது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அங்கு பணிபுரிந்து வந்த காவலர் ஷ்ரவண் குமார் என்பவர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் காவல் துறையின் பாதுகாப்பில் இருந்த தங்க நகைகளைத் திருடி, தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.12.37 லட்சத்திற்கு அடகு வைத்ததை உயர் அதிகாரிகள் விசாரணையில் உறுதி செய்துள்ளனர்.
விசாரணையின் போது தன் தந்தை நுரையீரல் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவரது மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடி காரணமாகவே இந்தத் துணிகரத் திருட்டில் ஈடுபட்டதாகவும் ஷ்ரவண் குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இவ்வளவு செய்தும் சிகிச்சை பலனின்றித் தனது தந்தை அண்மையில்தான் உயிரிழந்தார் என்றும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். தந்தையின் உயிரைக் காப்பாற்றக் காவல் நிலையப் பொருட்களையே திருடியதாகக் காவலர் கூறியபோதிலும், சட்டத்தை மீறிப் பறிமுதல் பொருட்களைத் தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக மீர்பேட்டை காவல்துறையினர் ஷ்ரவண் குமார் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு (Remand) அனுப்பியுள்ளனர்.
