LATEST NEWS
மீண்டும் கழுத்து நிறைய நகையோடு ரீல்ஸ்.. “நான் ஜெயலலிதா மாதிரி” என்ன யாரும் வீழ்த்த முடியாது… சவால் விடும் யூடியூபர் மதுமிதா..!!!!
நாகர்கோவில் அருகே உள்ள தம்பத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம் மதுமிதா (28), பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு மீண்டும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய வீடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுவது, தனது பெண் குழந்தை மீது பணத்தைக் கொட்டுவது போன்ற ஆடம்பர வீடியோக்களை வெளியிட்டுப் பிரபலமான இவர், அண்மைக் காலமாக எந்தப் பதிவுகளையும் வெளியிடாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் ரீல்ஸ் செய்யத் தொடங்கியுள்ளார்.
இவரது ஆடம்பரமான வீடியோக்களைப் பார்த்தே, கடந்த செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி இவரது வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்து 118 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி, ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டி (30) உட்பட 4 பேரைக் கைது செய்தனர். இது ஒருபுறமிருக்க, மதுமிதா நெல்லையில் உள்ள ஸ்பா ஒன்றில் பணியாற்றியபோது தன்னை ஏமாற்றி நகைகளைப் பறித்துக்கொண்டதாகக் கான்ட்ராக்டர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீசாரும் இவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து வந்த கொள்ளை மற்றும் மோசடிப் புகார்கள் காரணமாகக் கடந்த ஒரு மாத காலமாகச் சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியிருந்த மதுமிதா, தற்போது தனது மகளின் 3-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், வழக்கம்போல் தாராளமாக நகைகளை அணிந்து கொண்டு தோன்றிய அவர், விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சில கருத்துகளையும் பேசியுள்ளார்.
அதில், “சீதையைத் தீக்குளிக்க வைத்த பிறகும் அவரை யாரும் நம்பவில்லை; அவதூறுகள், கேலி கிண்டல்களுக்கு மத்தியிலும் நாங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “என்னைப் பற்றி பேசப் பேச நான் உயர்ந்து கொண்டேதான் இருப்பேன்; முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எவ்வளவோ அவதூறாகப் பேசினாலும் அவர் இரும்பு மனிதராக நிமிர்ந்து நின்றார்” எனக் கூறியுள்ள மதுமிதா, தங்களுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்குத் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
