LATEST NEWS
பி.எல்.எம் நிறுவனத்தின் ரூ.103 கோடி சொத்துகள் முடக்கம்.. 8 சொகுசு கார்கள், ரூ.9.6 கோடி தங்க நகைகள் பறிமுதல்.. அமலாக்கத்துறை அதிரடி..!!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தொடர்புடைய பி.எல்.எம் (BLM) நிறுவனத்திற்குச் சொந்தமான 103 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை (ED) அதிரடியாக முடக்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் முக்கியப் பிரமுகரான தொழிலதிபர் பிரேம் குமார் என்பவருக்குத் தொடர்புடைய கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அண்மையில் வருமான வரி மற்றும் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையின் தொடர்ச்சியாகவே தற்போது சொத்துகள் முடக்கப்படும் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனைகளின் போது, பி.எல்.எம் நிறுவனத்திற்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 சொகுசு கார்கள் மற்றும் 9.6 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் சோதனையின் போது பறிமுதல் செய்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு இந்த ஆடம்பரப் பொருட்கள் வாங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் பிரேம் குமார் மற்றும் பி.எல்.எம் நிறுவனத்தின் நிதி ஆதாரங்கள் குறித்தும், வெளிநாடுகளுக்கு ஏதேனும் சட்டவிரோதமாகப் பணம் அனுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சொத்து முடக்கம் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களின் தொழில் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
