CRIME
அய்யய்யோ.. திடீரென பொங்கி வழிந்த கால்வாய் வெள்ளம்.. மருமகனைக் காப்பாற்றிய மரக்கிளை.. மாமாக்கு நேர்ந்த விபரீதம்.. மரண பயமாய் மாறிய நொடிகள்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கோபாலபுரம் மண்டலத்தில் உள்ள சிட்யாலா கிராமத்திற்கு அருகே, கொவ்வாடா கால்வாயில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாமாவும் மருமகனும் அடித்துச் செல்லப்பட்ட சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அனதேவபேட்டையிலிருந்து தேவராபள்ளி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஹைதராபாத் செல்வதற்காகப் பேருந்து ஏறச் சென்ற தனது மருமகனை வழிஅனுப்ப மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றபோது, கால்வாயில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் இருவரும் எதிர்பாராதவிதமாகச் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்தின்போது, மருமகன் அதிர்ஷ்டவசமாக ஒரு மரத்தின் கிளையைப் பற்றிப் பிடித்துக் கொண்டு தனது உயிரைத் தக்க வைத்துக் கொண்ட நிலையில், 58 வயதான மாமா விஜய் குமார் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் மீட்புக் குழுவினர், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட விஜய் குமாரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மருமகன் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
