CRIME
பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்… 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரசோழபுரம் பகுதியில் இன்று காலை வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில், பத்ரிநாத் (10) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. வீரசோழபுரம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி-சரண்யா தம்பதியினரின் மகனான அச்சிறுவன், இன்று காலை வழக்கம் போல் அவனது தாய் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட இந்த எதிர்பாராத விபத்தில் சிக்கியுள்ளான்.
சிலிண்டர் வெடித்ததன் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், வீட்டின் சுவர்கள் மற்றும் மேற்கூரை முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. இந்த பயங்கரமான இடிபாடுகளுக்குள் சிக்கியதால் சிறுவன் பத்ரிநாத் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தான். சிலிண்டர் வெடித்த அதிர்வுச் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அலறியடித்தபடி சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவனின் தந்தை மூர்த்தி மற்றும் தாய் சரண்யா ஆகிய இருவரையும் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் இடிந்து கிடந்த வீட்டின் இடிபாடுகளை அகற்றி, உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டனர். இக்கோர விபத்து மற்றும் சிலிண்டர் வெடித்ததற்கான உண்மையான காரணம் குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமாகி சிறுவன் பலியான இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
