LATEST NEWS
“உங்க வீட்ல பெரிய தோஷம் இருக்கு…” ஒரே வார்த்தையில் குடும்பத்தையே மயக்கிய போலி சாமியார்..! கடைசி நொடியில் தாயும் மகளும் கொடுத்த மரண வெயிட் ட்விஸ்ட்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டம் எம்மிஃகனூரில் உள்ள மிலிட்டரி காலனியில் மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி ஏமாற்ற முயன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாமியார் வேடத்தில் சுற்றித் திரிந்த பந்தராம் என்ற போலி பாபா, ஒரு வீட்டின் உரிமையாளரிடம் “உங்கள் வீட்டில் தோஷம் மற்றும் பெரிய ஆபத்து உள்ளது” எனக் கூறி பயமுறுத்தியுள்ளார். தன்மிடம் ஆன்மீக சக்திகள் இருப்பதாகக் கூறிய அந்தப் போலி சாமியார், உடனடியாக சிறப்புப் பூஜை செய்யாவிட்டால் குடும்பத்திற்குப் பெரிய ஆபத்து நேரிடும் என்று நம்ப வைத்து, பூஜை செய்வதற்காக வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
வீட்டிற்குள் வந்த போலி சாமியார், தன் வசீகரப் பேச்சால் (ஹிப்னாடிசம்) வீட்டு உரிமையாளரைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து மயக்கியுள்ளார். குடும்பத்தினரின் கவனத்தைத் திசைதிருப்பி, வீட்டிலிருந்த ரொக்கப் பணம், தங்க-வெள்ளி நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களைக் கொள்ளையடிப்பதே அவனது திட்டமாக இருந்துள்ளது. இருப்பினும், வீட்டு உரிமையாளரின் இயல்பற்ற நிலையையும் சாமியாரின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளையும் கவனித்த அவ்வீட்டின் தாயும் மகளும் உடனடியாக உஷாராகி சத்தம்போடத் தொடங்கினர்.
பெண்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு, மயக்க நிலையில் இருந்த வீட்டு உரிமையாளர் உடனடியாக தெளிவடைந்தார். விஷயம் புரிந்த குடும்பத்தினரும், சத்தம் கேட்டுத் திரண்ட அக்கம் பக்கத்தினரும் போலி சாமியாரைச் சூழ்ந்துகொள்ள முயன்றனர். நிலைமை கைமீறிப்போனதை உணர்ந்த போலி பாபா பந்தராம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஆன்மீகம் மற்றும் தோஷப் பரிகாரம் என்ற பெயரில் பயமுறுத்தும் முன்பின் தெரியாத நபர்களை நம்ப வேண்டாம் என்றும், சந்தேகப்படும்படியான நபர்களைக் கண்டால் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
