LATEST NEWS
“மாரியம்மா சும்மா விட மாட்டா” பணத்தை வாங்கிட்டு ஓட்டு போடாதவங்க திருப்பிக் கொடுங்க… ஆந்திரா தேர்தல் வேட்பாளரின் வைரல் பேச்சு..!!!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் நகராட்சி 32-வது வார்டு உள்ளாட்சித் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் பிரசாத் ரெட்டி, தான் விநியோகித்த பணத்தை வாக்காளர்கள் திரும்பத் தர வேண்டும் எனப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். ஜனசேனா கட்சி வேட்பாளரிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த விசித்திரமான கோரிக்கையை வைத்துள்ளார்.
தேர்தல் செலவுக்காக தான் சுமார் 10 லட்சம் ரூபாயை 10 ரூபாய் வட்டிக்குக் கடன் வாங்கி, வாக்காளர்களுக்கு தலா 1,000 ரூபாய் வீதம் விநியோகித்ததாக பிரசாத் ரெட்டி அந்த வீடியோவில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். தன்னிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தனக்கு ஓட்டுப் போடாத 400 பேர் அந்தப் பணத்தை உடனடியாகத் திருப்பித் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார் .
மேலும், “பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியவர்களை மாரியம்மன் சும்மா விட மாட்டாள்” என்று சாபமிட்டுள்ள அவர், மக்கள் பணத்தைத் திருப்பித் தந்தால் அதை வைத்துத் தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தலில் தோற்ற விரக்தியில் வாக்காளர்களுக்கு வேட்பாளர் சாபமிட்டுப் பேசியுள்ள இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
