LATEST NEWS
“அச்சச்சோ.. நொடியில் மாறிய விதி..” கண்முன்னே தவித்த பேத்தி… தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய பாட்டி-தாத்தா… கதறி துடிக்கும் குடும்பம்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காவரம் மண்டலம் மேலுமாய் கிராஸ் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசுலு செட்டி மற்றும் அவரது மனைவி தேவி ஆகிய முதிய தம்பதியினர், அரிசி ஆலை நடத்தி வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், இரு மகன்களும் பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். பகவான் ஜெகந்நாதரை தரிசிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இந்தத் தம்பதியினர் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி பெங்களூரு சென்று, அங்கிருந்து குடும்பத்தினருடன் விமானம் மூலம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்குச் சென்றனர்.
புரி ஜெகந்நாதர் தரிசனத்தின் போது குடும்பத்தினர் அனைவரும் வைதரணி நதியில் புனித நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது நதியில் திடீரென நீரின் வேகம் அதிகரித்ததில், கரையில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது பேத்தி யஷஸ்வி வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். கண்முன்னே பேத்தி நீரில் மூழ்குவதைக் கண்ட தாத்தா ஸ்ரீனிவாசுலு செட்டியும், பாட்டி தேவியும் சற்றும் யோசிக்காமல் ஆழமான பகுதிக்குள் இறங்கி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து பேத்தியை பாதுகாப்பாகக் கரையை நோக்கித் தூக்கி வீசினர். இதனால் சிறுமி உயிர் தப்பிய போதிலும், நதியின் கடும் நீரோட்டத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த முதிய தம்பதியினர் இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
கரையில் நின்றிருந்த மகன்களும் மருமகள்களும் தங்களால் எதுவும் செய்ய முடியாமல் தவித்த நிலையில், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். மீட்புக் குழுவினர் நதியில் சுமார் மூன்று மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இருவரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் இருவரின் உடல்களும் சொந்த ஊரான கங்காவரத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது; உள்ளூர் எம்.எல்.ஏ அமர்நாத் ரெட்டி மற்றும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து அவர்களின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
