CRIME
“ஐ.டி ஊழியர்களுக்கு மட்டும் ரகசிய சப்ளை..” விசா காலாவதியான பிறகும் சென்னையில் சுற்றிய நைஜீரியர்.. போலீஸ் விசாரணையில் அம்பலமான பகீர் தகவல்..!!
சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வரும் இளைஞர்களிடம் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒரு நபரை தமிழக போலீசார் கைது செய்தனர். நைஜீரியா நாட்டை சேர்ந்த 47 வயதான ப்ராமிஸ் சுக்வு என்ற நபர், சுற்றுலா விசா மூலம் இந்தியாவிற்கு வந்துள்ளார். இவரின் டூரிஸ்ட் விசா காலாவதியான சூழலிலும், அதனை புதுப்பிக்காமல் சட்ட விரோதமாக சென்னையில் தங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இவர் பெங்களூரில் இருந்து போதைப்பொருளை ரகசியமாக வாங்கி வந்து, அதனை சென்னையின் பல்லாவரம் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வரும் இளைஞர்களை குறிவைத்து, மெத் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்து வந்துள்ளார். இதையடுத்து சென்னையில் ஐடி ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், பல்லாவரம் ரேடியல் சாலையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து நைஜீரிய இளைஞரிடம், போதைப்பொருளை யாரிடம் வாங்கி எந்த இடங்களில் விற்பனையில் ஈடுபட்டு வந்தார் என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
