LATEST NEWS
இனி இன்ஸ்டாகிராம் ரீல்ஸில்… ‘அந்த’ மாதிரி வீடியோக்கள் வராது.. மத்திய அரசின் எச்சரிக்கையால் மெட்டா எடுத்த அதிரடி முடிவு..!!
சமூக வலைதளங்களில் ஆபாசமான பதிவுகள், பாலியல் ரீதியாகத் தூண்டும் வீடியோக்கள் மற்றும் வன்முறைக் காட்சிகள் தானாகவே பரிந்துரைக்கப்படுவது பயனர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் தளங்களில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள் பரவுவது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. தவறான தகவல்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான வன்முறைப் பதிவுகள் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், பரிந்துரை முறைகளை மறுஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலை ஏற்று, இந்தியாவில் இன்ஸ்டாகிராம் மூலம் பயனர்களுக்குக் காட்டப்படும் பரிந்துரைப் பதிவுகளுக்கான விதிகளை மெட்டா நிறுவனம் கடுமையாக்கியுள்ளது. இதன் அடிப்படையில், பயனர்கள் பின்தொடராத கணக்குகளில் இருந்து வரும் பாலியல் ரீதியாகத் தூண்டும் பதிவுகள் மற்றும் வன்முறைக் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் முகப்புப் பக்கம் மற்றும் ரீல்ஸ் பகுதியில் பரிந்துரைக்கப்படுவது கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக மெட்டா விளக்கம் அளித்துள்ளது. இந்த நடவடிக்கை சர்ச்சைக்குரிய பதிவுகளை முழுமையாக நீக்குவது கிடையாது என்றாலும், அவை பின்தொடர்பவர்கள் அல்லாத மற்ற பயனர்களுக்குத் தானாகப் பரிந்துரைக்கப்படுவதைத் தவிர்க்கிறது.
மேலும், இந்தப் பதிவுகளை முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்த ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பரிந்துரைக்கும் முன்பே உள்ளடக்கங்களை ஆய்வு செய்யும் இந்த நவீன அமைப்புகளால், பயனர்களின் புகார்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களின் இந்தத் கடுமையான கட்டுப்பாடுகளுடன், பயனர்களும் தங்களுக்குப் பிடிக்காத பதிவுகளை மறைப்பது மற்றும் புகார் அளிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினால் மட்டுமே சமூக வலைதளப் பயன்பாட்டை பாதுகாப்பானதாக மாற்ற முடியும்.
