CRIME
“உடல் அழுகிவிட்டதால் ஊருக்கு அனுப்ப முடியாது…” சிங்கப்பூரில் மாயமான சிவகங்கை இளைஞருக்கு நேர்ந்த கொடூர முடிவு.. ராணுவ வீரரான அண்ணன் வைத்த அதிர்ச்சிப் புகார்..!!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வடக்கு அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான ஸ்டீபன் ராஜ், சிங்கப்பூரில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி பணிக்காகச் சிங்கப்பூர் சென்ற ஸ்டீபன் ராஜ், நவம்பர் 11-ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அந்நிறுவனத்தின் மேலாளர், இந்திய ராணுவத்தில் பணிபுரியும் அவரது அண்ணன் செங்கோல்ராஜுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிங்கப்பூரில் உள்ள உறவினர்கள் மூலம் தேடியபோது, ஸ்டீபன் ராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக நிறுவனத் தரப்பில் கூறப்பட்டதாகவும், ஆனால் அவர் தங்கியிருந்த அறையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் சடலமும் கயிறும் தனித்தனியாகக் கண்டெடுக்கப்பட்டதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், உடல் அழுகிவிட்டதால் இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என இந்திய தூதரகம் என்ற பெயரில் பேசியவர்கள் கூறியதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், ஸ்டீபன் ராஜின் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுப்பியுள்ளனர். தனது தம்பியை அவர் பணிபுரிந்த நிறுவனத்தினர் அல்லது ஒரே அறையில் தங்கியிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் வேலூரைச் சேர்ந்த சக்திவேல் ஆகியோர் அடித்துக் கொன்றிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக ராணுவ வீரர் செங்கோல்ராஜ் தெரிவித்துள்ளார். எனவே, தனது சகோதரரின் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவும், உடலை சொந்த ஊருக்கு மீட்டுக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கக் கோரி செங்கோல்ராஜ் மற்றும் அவரது தந்தை அருள் தேவதாஸ் ஆகியோர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகாஷிடம் நேரில் மனு அளித்துள்ளனர்.
