CRIME
“சண்டைக்குக் காரணமே இந்தப் பணம்தான்…” வங்கியிலிருந்து பணத்தை எடுத்து 500 ரூபாய் நோட்டுகளைத் தீயிட்டுக் கொளுத்திய கணவன்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், மனைவி ரூ.22,000 செலவு செய்து ஆடை வாங்கியதால் ஏற்பட்ட சண்டையில், ஆத்திரமடைந்த கணவர் வங்கியிலிருந்து பணத்தை எடுத்து 500 ரூபாய் நோட்டுகளைத் தீயிட்டுக் கொளுத்திய விசித்திரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த மன்ஜீத் தாக்கட் என்பவருக்கு அவரது மனைவி ரூ.22,000 மதிப்பிலான விலையுயர்ந்த சூட் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். இதனைக் கண்ட மன்ஜீத், “நான் சொந்தமாக வீடு வாங்குவதற்காகப் பணத்தைச் சிறுகச் சிறுகச் சேமித்து வருகிறேன்; ஆனால் நீ இவ்வளவு பணத்தை வீணடிக்கிறாயே?” என்று கூறி மனைவியிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கணவரின் இந்தப் பேச்சால் மனமுடைந்த அவரது மனைவி, கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் மேலும் விரக்தியடைந்த மன்ஜீத், தங்களுக்குள் சண்டை ஏற்படுவதற்கு இந்தப் பணம்தான் காரணம் என்றும், இனி அந்தப் பணமே வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
சொன்னபடியே வங்கிக்குச் சென்ற மன்ஜீத் தாக்கட், அங்கிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வந்து 500 ரூபாய் நோட்டுகளைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளார். ரூ.22,000 செலவு செய்ததற்காக மனைவியுடன் சண்டையிட்ட நபர், அதற்கும் மேலான பணத்தை நெருப்பில் இட்டுச் சாம்பலாக்கிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
