LATEST NEWS
“சாவு வீட்டில கூட செருப்பு போடாம” சினிமா ஷூட்டிங்க் போல பூவைத் தூவி ரீல்ஸ் எடுக்குறாங்க… முதல்வர் விஜய்யை விளாசிய கீதா ஜீவன்..!!
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், துக்க நிகழ்வுகளைக் கூட விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவதாகவும் திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் முதலமைச்சர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற உலக மீனவர் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கீதா ஜீவன், சாயர்புரம் அருகே 16 வயது சிறுமி கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்தார். தற்போதைய ஆட்சியில் பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை யாருக்கும் போதிய பாதுகாப்பில்லை என்றும், காவல்துறைக்கோ தண்டனைக்கோ அஞ்சாத சூழல் நிலவுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 30 நாட்களில் 16 கொலைகள் நடந்தும், கடந்த ஆண்டை விடக் குறைவுதான் என ஆட்சியாளர்கள் அலட்சியமாகப் பேசுவது வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், காவல்துறையினர் தங்களது அடிப்படைக் கடமைகளைச் செய்யாமல் திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபடுவதாகச் சாடிய அவர், முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். வி.எஸ். பாபுவின் இறுதிச் சடங்கில் காலில் செருப்பு அணியாமல் சென்றதையும், செல்லும் இடமெல்லாம் பூக்களைத் தூவிச் செல்வதையும் சுட்டிக்காட்டிய கீதா ஜீவன், ஆட்சியாளர்கள் துக்க வீட்டில் கூடச் சினிமா ஷூட்டிங் போல ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருப்பதாகக் கேலி செய்தார்.
இதைத்தொடர்ந்து, பெண் அதிகாரிகளுக்கு எதிரான அத்துமீறல்கள் குறித்தும் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். பெண் காவல் கண்காணிப்பாளரை (SP) இரவு நேரத்தில் தொலைபேசியில் அழைத்து மிரட்டும் தொனியில் பேசுவதும், மாவட்ட ஆட்சியர் போன்ற உயர் பதவியில் இருக்கும் பெண்களிடம் கூட நக்கலாகவும் தரக்குறைவாகவும் நடந்து கொள்வதும் தமிழகத்திற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெண்களை மதிக்கத் தெரியாத ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருவதாகவும், இத்தனை குற்றச்சாட்டுகள் எழுந்தும் முதலமைச்சர் விஜய் வாய் திறக்காமல் மௌனம் காப்பது ஏன் என்றும் கீதா ஜீவன் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
