CRIME
“ஒரு நாள் எல்லோரும் இறக்கத்தான் போகிறார்கள்…” மரணம் குறித்த ஓவியத்தை வரைந்து வாலிபர் செய்த பகீர் காரியம்.. விடுதி அறையில் சிக்கிய டைரியால் அதிர்ச்சி..!1
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், விடுதி அறையில் தங்கியிருந்த 30 வயதான டெலிவரி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கேசவ் வர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஐடிஐ படிப்பை முடித்த இவர், சுமார் ஒரு மாதத்திற்கு முன்புதான் கான்பூருக்கு வந்து கல்யாண்பூர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி டெலிவரி பையனாகப் பணிபுரிந்து வந்தார்.
நேற்று கேசவ் தங்கியிருந்த அறையிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக விடுதி உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விடுதி உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அறையின் கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்ததால், தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் கதவு உடைக்கப்பட்டது. உள்ளே சென்று பார்த்தபோது, கேசவ் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அறையைச் சோதனையிட்ட காவல்துறையினர், அங்கிருந்து கேசவின் நாட்குறிப்பு ஒன்றைக் கைப்பற்றினர். அந்த நாட்குறிப்பில் மரணம் தொடர்பான ஓவியம் ஒன்றை வரைந்திருந்த கேசவ், “ஒரு நாள் எல்லோரும் இறக்கத்தான் போகிறார்கள், அதனால் உங்கள் வேலை நல்லதோ கெட்டதோ, அதைத் தொடர்ந்து செய்யுங்கள்” என்ற வாசகத்தையும் எழுதியிருந்தார். இந்தக் குறிப்புகளின் அடிப்படையில் இது தற்கொலை வழக்காக இருக்கலாம் என காவல்துறையினர் முதற்கட்டமாகக் கருதுகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கேசவின் தந்தை கோபால் வர்மாவுக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். கேசவ் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் பணிபுரிவதாகத் தங்களிடம் கூறியிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தற்போது கேசவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு கான்பூருக்கு வந்த அவர் எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது குறித்து உதவி ஆணையர் திலீப் சிங் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
